தலைவரின் வாழ்த்துச் செய்தி

IMG 8404எந்தவொரு நாட்டினதும் அரச கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்க நிதியத்திலிருந்து சம்பளம் வழங்கி, நியமிக்கப்படும் உத்தியோகத்தர்களினால் பொதுமக்களுக்கு ஆற்றப்படும் சேவை அரசாங்க சேவை என அழைக்க முடியும். அரசாங்க சேவையினுள் பல்வேறு சேவைகளை ஆற்றும் பிரிவினரான தொழிலாளி முதல் அமைச்சு செயலாளர் வரை பரந்த அளவில் வியாபித்துக் காணப்படுகின்றனர். இந்த வட்டத்திற்குள் அரசாங்க உத்தியோகத்தர்களின் பதவிகள் மற்றும் பதவித் தரங்கள் அதிகமான எண்ணிக்கையை நாம் அடையாளம் காண முடியும். இவ்வாறான ஒரு பதவித் தரத்திற்காக விசேடமான கடமைகளும் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அரசாங்க உத்தியோகத்தரொருவரது கடமை யாதெனில் தனக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவதாகும்.

அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களும் பொதுமக்களுக்காக கடமையாற்றுகின்றனர். அவ்வாறே தமது நிதியத்திலிருந்து சம்பளம் பெறும் உத்தியோகத்தர்களிடமிருந்து தங்களுக்குத் தேவையான சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்களுக்கு உரிமையுண்டு. எனவே, அனைத்து அரசாங்க ஊழியர்களும் தாங்கள் அரசாங்க சேவையில் பதவி வகிப்பது பொதுமக்களுக்காகச் செய்கின்ற ஒரு நம்பிக்கைப் பொறுப்பாகக் கருதி அதனைப் பொறுப்பேற்று வகிப்பது அவசியமாகும்.

“அரசாங்க உத்தியோகத்தர்கள் பொதுமக்களுக்கு வழங்கும் சேவையை உரிய முறையில் வழங்குதல் வேண்டும்” என்பதன் மூலம் கருதப்படுவது தான் நிறைவேற்றும் சேவையின் தரம், உற்பத்தித்திறன், வினைத்திறன் என்பன பொதுமக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் சிறந்த மட்டத்தில் இருத்தல் வேண்டும் என்பதாகும். எனவே அவ்வாறான சிறப்பான சேவையை வழங்க முடியுமான பொருத்தமான ஆள் அரசாங்க சேவைக்கு தெரிவுசெய்யப்பட வேண்டுமென்பது தெளிவு.

அரசாங்க உத்தியோகத்தர்களை அரசாங்க சேவைக்கு நியமித்தல், அவர்களது பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், அவர்களது ஒழுக்கக் கட்டுப்பாடு மற்றும் பதவி நீக்கம் செய்தல் ஆகிய அடிப்படைப் பொறுப்புக்களை நிறைவேற்ற இலங்கை சனநாயக சோசலிசக் அரசியலமைப்பின் 54 ஆம் உறுப்புரை மூலம் தாபிக்கப்பட்டுள்ள அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு அதன் 55 ஆம் உறுப்புரை மூலம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, ஜனாதிபதி அவர்களினால் மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்படும் உத்தியோகத்தர்கள், கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் உத்தியோகத்தர்கள், முப்படையைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் ஆகியோர் தவிர்ந்த ஏனைய அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களும் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றனர். அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் மூலம் தாபிக்கப்பட்ட மாகாண அரசாங்க சேவையிலுள்ள கல்வித்துறை சார்ந்த உத்தியோகத்தர்களுக்கும் இந்த ஆணைக்குழுவின் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு நோக்கும் போது இந்த ஆணைக்குழுவின் பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை அண்மிக்கின்றது. எனவே, வினைத்திறன்மிக்க சேவையொன்றினை வழங்கும் நோக்குடன் இந்த ஆணைக்குழுவின் அதிகாரங்கள் அரசியலமைப்பின் 56 மற்றும் 57 ஆம் உறுப்புரைகளின் பிரகாரம் கல்வி மற்றும் சுகாதார குழுக்களுக்கு மற்றும் அமைச்சு செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆணைக்குழுவினால் நேரடியாக நிறைவேற்றப்படும் சேவைகளை மிகவும் வினைத்திறனுடன் நிறைவேற்றுவதற்கு தேவையான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சில சேவைகளை இந்த ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதை மிகவும் மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அவ்வாறே, நான் உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள், ஆணைக்குழுவின் செயலாளர் உட்பட மொத்தப் பணியாட்களும் இந்த ஆணைக்குழுவினால் ஆற்றப்படும் சேவைகளை உச்ச அளவில் அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றனர் என்பதை ஞாபகமூட்டுகின்றேன்.

பொதுமக்களுக்கான சிறந்த அரசாங்க சேவையை வழங்குவது எமது ஒரே அபிலாஷையாகும்.